திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கையில் தொடரும் பதற்றம்...பீதியில் உறைந்துள்ள பொதுமக்கள்! April 22, 2019

ns7.tv
Image
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது, 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் பதற்றம் நிலவுவதால், இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இலங்கையில் உள்ள தேவாலயங்களில் காலையில் வழக்கம்போல கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பில்  உள்ள தேவாலயம் ஆகியவற்றில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு பலர் அங்கும் இங்குமாக தப்பி ஓடியதால் அப்பகுதியே மரண ஓலமாக காட்சியளித்தது. தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வேளையில், கொழும்பில் உள்ள ஷாங்கிரி லா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர ஹோட்டல்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 
பிற்பகலில் 2 மணியளவில் தெகிவாலா பகுதியில் மேலும் ஒரு குண்டு வெடித்தது. தெமட்டகொட பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாளில் 8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினர் 35 பேர் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்த 450-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்த வங்கிகளில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மட்டக்களப்பு தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கங்களும் பொறுப்பேற்காத நிலையில், சந்தேகத்தின் பேரில் 7 பேரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் குண்டுவெடிப்பால் கொழும்புவில் பதற்றம் நிலவுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்திலும் நாளை அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் கோழைத்தனமான தாக்குதல் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும், அமைதி காக்குமாறும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வர வேண்டாம் எனவும் இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 
இலங்கையில் நிலவும் பதற்றமான சூழலை தணிக்கும் வகையில் இலங்கையில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு,  பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக  வலைத்தலங்களின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய துாதரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துாதரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட மிக மோசமான வெடிகுண்டு தாக்குதலாக இது கருதப்படுகிறது. 
source ns7.tv