source ns7.tv
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று முன்தினம் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் குண்டு வெடிப்பில் பலத்த சேதமடைநதன. இலங்கையை உலுக்கிய இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக உயர்ந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்னறர். இதனிடையே இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படுபவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நீர்கொழும்பில் உள்ள செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்திற்குள் முதுகில் பெரிய பை ஒன்றை மாட்டிக்கொண்டு மக்கள் குழுமியிருக்கும் பகுதியில் அந்த நபர், செல்வது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆங்காங்கே நடைபெற்று வரும் இறுதிச் சடங்குகளில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு இடங்களில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருவதால் இலங்கையே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பு பற்றிய உளவுத் தகவல்களை அலட்சியப்படுத்தியதற்காக இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பாக தனியார்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே, இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சர்வதேச தொடர்புகள் இருப்பதாக கூறினார். இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என இலங்கை சுகாதாரத்துறை அமைச்ரும் உறுதி அளித்துள்ளார்.