சனி, 20 ஏப்ரல், 2019

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை! April 20, 2019


Image
தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. சேலம் பேருந்து நிலையம், அயோத்தியாபட்டனம், ஆச்சாங்குட்டப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குளுமையான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டியில் கனமழையின்போது மின்னல் தாக்கி ராமநாதன் என்ற மண்பாண்ட தொழிலாளி உயிரிழந்தார். இவர் அப்பகுதியில் உள்ள மண்பாண்டம் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சொசைட்டி கட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கி கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதில் சிக்கி ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பெய்த கனமழை காரணமாக 3 மின்கம்பங்கள் சாய்ந்ததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. மேலும் நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகைகளும் சூறைக்காற்றில் அடித்து செல்லப்பட்டன. தாராபுரம் அம்மன் கோயில் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோயலின் கோபுரமும் பலத்த காற்று மற்றும் கனமழையால் சேதமடைந்தது. 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக கனமழை பெய்தது. பாலகோம்பை, ஏத்தகோவில், கன்னியபிள்ளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால், ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. 
ஈரோட்டில் பெய்த மிதமான மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது. கடந்த சில நாட்களாக ஈரோட்டின் பல பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்றிரவு பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.