ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தங்களது சொந்த குழந்தைகள் 13 பேரை ஈவு இரக்கமின்றி பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்த பெற்றோருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் உள்ள Perris நகரைச் சேர்ந்வர் டேவிட் ஆலன் டர்பின் (வயது 57). இவர் தனது மனைவி லூயிஸ் ஆனா டர்பின் (வயது 50) மற்றும் 13 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டேவிட்டின் வீட்டில் இருந்து சுவர் ஏறிகுதித்து தப்பிய அவரது 17 வயது மகன் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களது பெற்றொர் என்னையும், எனது சகோதர, சகோதரிகள் 12 பேரையும் வீட்டில் சிறை வைத்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார். வீடு எங்கு உள்ளது என்று எதிர்முனையில் பேசியவர் கேட்டபோது அச்சிறுவன் தனது வீட்டின் விலாசத்தை சரியாக சொல்லவே சிரமப்பட்டுள்ளார். ஒருவழியாக அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்ற போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
தங்களது சொந்த குழந்தைகளையே டேவிட் தம்பதியர் கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்தது. மிகவும் மோசமான உடல்நிலையில் மிகவும் நலிவுற்று காணப்பட்ட அக்குழந்தைகளை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இரண்டு குழந்தைகள் கட்டிலில் இரும்பு செயினால் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். இருட்டு அறைகளில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்ட குழந்தைகளை காவல்துறையினர் மீட்டனர்.
2 முதல் 29 வயதுக்கிடையிலான அக்குழந்தைகள் தங்களது பெற்றொர் ஆண்டாண்டுகளாக எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் என்பதை அவர்கள் விளக்கி அழுதனர்.
அந்த வீடு மிகவும் துர்நாற்றத்துடன் இருந்தது, அக்குழந்தைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர் 
 என்பதால் மிகவும் மோசமான தோற்றத்தில் காணப்பட்டுள்ளனர்.
சரியான உணவளிக்காமல் அடி உதை என கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளதால் ஊட்டச்சத்து குறைபாடு, தசை சுருக்கம், வளர்ச்சிக் குறைபாடு மற்றும் காயங்கள் என குழந்தைகள் மிகவும் பரிதாபமாக காட்சியளித்துள்ளனர். இவர்களுக்கு 20 மணி நேரத்திற்கு ஒரு முறை என குறைந்தளவான உணவே கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய விஷயங்களுக்கும் படுக்கையில் வைத்து இரும்பு செயினால் பல மணி நேரங்களுக்கு கட்டி வைக்கப்பட்டுள்ளனர். செயினால் கட்டிவைக்கப்பட்டுள்ளதால் கடுமையான காயங்களை காண முடிந்தது. கொடுத்த வேலைகளை முடிக்காவிட்டால் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு தடியால் பெற்றோர்கள் அடித்து வந்துள்ளனர்.
உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வழக்கின் விசாரணை ரிவர்சைட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பெற்றோர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபணம் செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையளிக்கப்பட்டது.
தண்டனையை கேட்டு டேவிட் தம்பதியர் கதறி அழுதனர். அங்கு வந்திருந்த அவர்களின் இரண்டு மகள்களில் ஒருவர் தீர்ப்பு குறித்து பேசும் போது, “எனது முழு வாழ்க்கையையும் எனது பெற்றொர்கள் எடுத்துக்கொண்டனர், இப்போது எனது வாழ்க்கையை நான் மீட்டெடுக்கிறேன் என்றார், மற்றொரு மகள் கூறும்போது, நான் அவர்களை மன்னித்துவிட்டேன், தற்போதும் எனது பெற்றோர்களை நான் விரும்புகிறேன் என்றார்.
தற்போது அக்குழந்தைகள் 3 முதல் 30 வயதுடையவர்களாக மாறியுள்ளனர். சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் அவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.