டிக் டாக் செயலிக்கு நீதிமன்றம் விதித்த தடையின் எதிரொலியாக இந்தியாவில் டிக் டாக் செயலி பதிவிறக்கத்தை கூகுள் ப்ளே ஸ்டோர் முடக்கியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சீனாவில் அறிமுகமான டிக் டாக் செயலியை இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 24 கோடி முறை டிக் டாக் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், டிக் டாக் செயலியால் சாதிய வன்முறைகள் தூண்டப்படுவதாகவும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலான வீடியோக்கள் பரப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் விளைவாக அதனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதை எதிர்த்து டிக் டாக் செயலி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யமுடியாதபடி டிக் டாக் முடக்கப்பட்டுள்ளது.
source ns7.tv