வங்கக் கடலில் உருவான புயல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கடலோர பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாட்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்றும் சத்யகோபால் தெரிவித்தார்.
புயல் குறித்து, தஞ்சாவூரில் உள்ள 36 கடலோர மீனவக் கிராமங்களுக்கு கடலோர காவல்படையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 900 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப் படகுகள் ஏற்கனவே கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
source ns7.tv