அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை, அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கப் போவதாக தேனி மாவட்டம் குரங்கணி பகுதி முதுவாக்குடி மலைவாழ் மக்கள் அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணியின் மேல்பகுதியில் உள்ளது முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் மலை கிராமங்கள். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்திருக்கக்கூடிய இந்த மலை கிராமங்கள், தமிழக - கேரள எல்லையாக உள்ளன.
ஆங்கிலேயர் காலம் முதல், இப்பகுதி மக்கள் தேயிலை, காப்பி, மிளகு போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வனத்துறையினர் அனுமதி அளிக்காததால், நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் இந்த மலைவாழ் மக்களுக்கு இன்னும் சாலை வசதி கிடைக்கவில்லை. இதனால், உடல் நலம் சரியில்லாதவர்களை தூளி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவலம் நிலவி வருகிறது.
இப்பகுதியில் விளையும் ஏலக்காய், மிளகு, காபி மற்றும் தேயிலை போன்றவற்றை கோவேரி கழுதைகளில் ஏற்றியும், ஆட்கள் மூலமாக போடி சந்தைக்கு தலைசுச்சுமையாக சுமந்து வருகின்றனர். இதனால் அதிகளவில் பணம் செலவிடப்பட வேண்டியதிருப்பதாக இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றச்சாட்டுகின்றனர். தொடர்ந்து தங்களை புறக்கணித்து வரும் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தேர்தலையும் இந்த மலைவாழ் மக்கள் புறக்கணித்தனர்.
இதனையடுத்து, உரிய விசாரணைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். கோட்டாட்சியர் வைத்தியநாதன் அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். இப்பகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக வனத்துறையிடம் கலந்தாலோசனை மேற்கொண்ட அவர், விரைவில் சாலை வசதி அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
source ns7.tv