வெள்ளி, 12 ஏப்ரல், 2019

மேற்குவங்க அரசிற்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்! April 11, 2019

Image
திரைப்படம் ஒன்றை தடை செய்த காரணத்திற்காக மமதா பானர்ஜியின் மேற்குவங்க அரசாங்கத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக 20 லட்ச ரூபாயை அபராதம் விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று வங்காள மொழியில் Bhobishyoter Bhut என்ற அரசியல் நையாண்டி திரைப்படம் வெளியானது. படம் வெளியான மறுநாளே மேற்குவங்க அரசாங்க அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாக இந்தப்படத்தை பல்வேறு திரையரங்கங்களும் திரையிடாமல் நிறுத்தின.
இதன் காரணமாக படத்தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் வெகுவாக நஷ்டமடைந்ததால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த மார்ச் 15ம் தேதி மமதா பானர்ஜியின் அரசு இந்தப்படத்தை திரையிட எந்த இடையூரும் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு மேற்குவங்க அரசாங்கத்திற்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க அரசாங்கத்தின் இச்செயல் கருத்து சுதந்திரத்தை அப்பட்டமாக மீறுவது போலானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்குவங்க அரசின் சகிப்புத்தன்மையற்ற இச்செயல் கலை சுதந்திரத்திற்கு எதிரானது என நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
Bhobishyoter Bhut என்றால் எதிர்கால பேய் என அர்த்தமாகும். அனிக் தத்தா இயக்கியுள்ள இப்படத்தில் அரசியல்வாதி ஒருவரின் ஆவி உட்பட ஆவிகள் குழு ஒன்று ஒரு பழைய திரையரங்கில் வசிப்பது போலவும், அரசியலை மையப்படுத்தி நையாண்டி செய்யும் விதமாகவும் உள்ளது. இந்தத்திரைப்படத்தை திரையிடுவதன் மூலம் பொதுமக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தப்படும் எனவும், அரசியல் ரீதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசின் சார்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மமதா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசாங்கத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது