அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கிவிட்டது. 7 கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தல் வரும் மே 19 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டத்தில் உள்ள தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே நாளில் தான் நடைபெற உள்ளது.
வாக்கு இயந்திரங்கள் மூலம் நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் முதல் முறையாக தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். வாக்களிப்பது எப்படி? வாக்கு மையத்தில் வாக்களிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
1. முதலில் வாக்குமைய அதிகாரி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை சரிபார்ப்பார். உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது பிற அடையாள அட்டையையும் சரிபார்ப்பார்.
2. மற்றொரு அதிகாரி உங்களது விரலில் அழியாத மையை வைத்துவிட்டு, 17A படிவத்தில் உங்களது கையொப்பத்தை வாங்கிக்கொள்வார்.
3. கையொப்பமிட்ட 17A படிவத்தை 3வது வாக்குமைய அதிகாரி பெற்றுக்கொண்டு, கைவிரலில் வைத்த மையை சரிபார்ப்பார். இதன் பின்னர் வாக்கு இயந்திரம் உள்ள பகுதிக்கு நீங்கள் செல்லலாம்.
4. வாக்கு இயந்திரத்தில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவருக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தி உங்கள் வாக்கினை பதிவு செய்யவேண்டும். வாக்கினை பதிவு செய்த பின்னர் பீப் ஒலி கேட்கும். அப்போது உங்களது வாக்கு பதிவானதாக அர்த்தம். (இந்த முறை வாக்காளர் பெயர் மட்டுமல்லாமல் அவரது புகைப்படமும் இடம்பெற்றிருக்கும்.)
5. வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள VVPAT எனப்படும் இயந்திரம் மூலம் நீங்கள் வாக்களித்த வேட்பாளாருக்கு தான் உங்களது வாக்கு பதிவானதா என்பதை தெரிந்துகொள்ளலாம். நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சீரியல் எண், பெயர், சின்னம் ஆகியவை VVPAT இயந்திரத்தில் உள்ள திரையில் 7 நொடிகளுக்கு தோன்றி மறையும்.
6. எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்கு இயந்திரத்தில் கடைசி இடத்தில் உள்ள NOTAவிற்கு வாக்களிக்கலாம்.
மொபைல் போன்கள், கேமராக்கள் உள்ளிட்டவை வாக்குமையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கீழ்கண்ட இணையதளத்தில் சென்று மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்: