ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

மோடியை எதிர்த்து போட்டியிடுகிறாரா ப்ரியங்கா காந்தி? April 14, 2019

வாரணாசியில் ப்ரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் வாரணாசி நோக்கிய ப்ரியங்காவின் பயணமும் இதற்கு கட்டியங் கூறுகிறது
தேர்தல் களத்தில் ஒரு கட்சி பிரபலமான, செல்வாக்கு மிக்க ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால், எதிர்க்கட்சிகள் அந்த வேட்பாளருக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் சவாலான வேட்பாளரை முன்னிறுத்தும். அதுவும் ஆளுங்கட்சியின் தலைவர் போட்டியிடுகிறார் என்றால், மறுமுனையில் அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது, அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு, முதல்முறையாக நாடாளுமன்றத்தின் படியேறிய நரேந்திர மோடி, பிரதமர் நாற்காலியிலும் 5 ஆண்டுகள் அமர்ந்தார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே மோடி போட்டியிட இருப்பதாக தாமரை கட்சியின் தகவல் தெரிவிக்கின்றன. வரும் 26 ஆம் தேதி மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. 
இதனை அடுத்து, மோடிக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. மோடியுடன் மோதவிருக்கும் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் இதுவரை சஸ்பென்சாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை எதிர்த்து, ப்ரியங்கா காந்தி களமிறக்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றப்பிறகு, அக்கட்சி மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றிவாகை சூடாத நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச களமிறக்கப்பட்டார் ப்ரியங்கா காந்தி.  
இந்திரா 2.0 என வர்ணிக்கப்பட்ட ப்ரியங்காவின் அரசியல் நுழைவு, இந்திய அரசியலில், அதுவும் இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை  ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு, அரசியல் அரங்கில் நிழலாடி கொண்டிருக்கிறது. இந்த சூழலில், மக்களவைத் தேர்தலில் தீவிர பரிசீலனைக்குப்பின், மோடிக்கு எதிராக, ப்ரியங்காந்தியை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள ப்ரியங்கா காந்தியும், இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தெரிகிறது. 
கடந்த மாதம் கங்கா யாத்ரா என்ற பெயரில், பிரயாக்ராஜ் தொடங்கி, வாரணாசி வரை 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உத்தரபிரதேசத்தில் யாத்திரை நடத்தினார் ப்ரியங்கா காந்தி. மக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு நிகழ்வாக இது பயணித்த வேளையில், காங்கிரஸ் தொண்டர்கள் ப்ரியங்கா காந்தி ரேபரெலி அல்லது அமேதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ப்ரியங்கா காந்தியோ, ஏன் நான் வாரணாசியில் போட்டியிடக்கூடாதா? என நகைச்சுவையான தொனியில் தொண்டர்களின் மனஓட்டத்தை கேட்டறிந்தார். தனது 3 நாள் சுற்றுப்பயணத்தின்போது, வாரணாசி எம்.பியான மோடி மீது, அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்த ப்ரியங்கா காந்தி, இந்த தேர்தல் 
மற்றொரு சுதந்திர போராட்டத்திற்கான அறைகூவல் என்றும் முழங்கினார். இதே குரலை முன்னிறுத்தி, தனது கணவர் ராபர்ட் வத்ரா மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடுத்து, விசாரணைக்கு இழுத்தடிக்கும் மோடிக்கு, அரசியலில் நெருக்கடி கொடுக்க ப்ரியங்கா காந்தி முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மோடிக்கு எதிராக ப்ரியங்காவை களமிறக்கும் இறுதி முடிவை வெகுவிரைவில் கட்சியின் தலைவர் ராகுல் எடுப்பார் என கூறுகின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.