தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை இணையதளங்களில் சென்று தங்களது பதிவு எண், மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை தேர்வர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் என்றும், பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே இரண்டாம் தேதி பிற்பகல் முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் வழங்கப்படும் என்றும், மே 2 முதல் நான்காம் தேதி வரை மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெறாத, பங்கேற்காத மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
source ns7.tv