கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், வைக்கப்பட்ட அரிய வகை மலர்கள் மற்றும் வெளிநாட்டு மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 17, 18,19 ம் தேதிகளில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், 25,26 ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பழக்கண்காட்சியும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 2.60 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், சிம்ஸ்பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்களை பூந்தொட்டியில் அடுக்கி தற்போது சுற்றுலா பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாலைவனங்களில் வளரக்கூடிய அரிய வகை கற்றாழை வகைகளை சேர்ந்த செடிகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவற்றின் முன்பு செல்பி எடுப்பதில் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் செல்லும் முக்கிய சாலையாக இருக்கும் பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி , பேரிபால்ஸ், எம் எம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சாலைகளில் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையே கொடைக்கானலில் விதிகளை மீறி செயல்பட்டதால் உயர் நீதிமன்ற உத்திரவின்படி சீல்வைக்கப்பட்ட தங்கும் வீடுதிகளை திறந்து சுற்றுலா பயணிகளுக்கு சிலர் வாடகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து அந்த விடுதிகளுக்கு மீண்டும் சீல் வைத்தனர்.
source ns7.tv