செவ்வாய், 16 ஏப்ரல், 2019

மமதா பானர்ஜிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த வெளிநாட்டு நடிகர்! April 16, 2019

source ns7.tv
Image
மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வங்காளதேச நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சி உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள ராய்கஞ்ச் மக்களவை தொகுதி சார்பில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஹையா லால் அகர்வாலை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருடன் இணைந்து வங்காள தேச நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ஃபிர்தோஸ் அகமது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வங்காளதேச எல்லைப்பகுதியான ஹெம்தாபாத், கரந்தகி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரங்களிலும் அவர் கலந்து கொண்டார், அவருடன் தெலுங்கு நடிகர்களான அன்குஷ் ஹஸ்ரா மற்றும் ஃபாயல் ஆகியோரும் கலந்துகொண்டனர். 
இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர் கலந்து கொண்டுள்ளதால் இந்த நிகழ்வு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில பாஜக மூத்த தலைவர் சிஷிர் பஜோரியா, வாக்குப்பதிவு நாளில் அதனை சீர்குலைக்கும் வகையில் எல்லைகடந்து ஆட்களை கூட்டி வருவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு வாடிக்கையான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இம்முறை பகலிலேயே வெளிநாட்டில் இருந்து ஒருவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் எனவும் மமதா பானர்ஜிக்கு அனைத்துமே எல்லைகடந்தே வருகிறது என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என்றும் அவர் கூறினார். 
இன்று வெளிநாட்டு நடிகர், நாளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். இந்தியாவின் தேர்தலில் வெளிநாட்டு நடிகருக்கு என்ன பங்கு உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று மற்றொரு பாஜக தலைவர் திலிப் கோஷ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என அக்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் கேட்டபோது, எந்த கட்சிக்காகவும், யார் வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என விளக்கமளித்தனர்.