செவ்வாய், 16 ஏப்ரல், 2019

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பின்னர் முதல்முறையாக தேர்தலில் வாக்களிக்கும் குடும்பம்! April 16, 2019

source ns7.tv
Image
வந்தவாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயது முதியவர் கன்னியப்பன். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர், விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகளும், மூன்று பேரன்களும் உள்ளனர். பல ஆண்டுகளாக செய்யாறு அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2017ம் ஆண்டு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை எதிரொலியாக  கன்னியப்பன் குடும்பத்தினர் 7  மீட்கப்பட்டனர். கொத்தடிமைகளாக இருந்த காலத்தில் வாக்குரிமை உட்பட எவ்வித அடிப்படை உரிமை பற்றியும்  விழிப்புணர்வு இல்லாமல் அவர்கள் வைக்கப்பட்டிருந்ததால், கன்னியப்பன் குடும்பத்தினருக்கு வாக்காளர் அடையாள அட்டை உட்பட அரசு ஆவணங்களை கிடைக்க அதிகாரிகள் வழிவகை செய்தனர்.  
இதையடுத்து வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கன்னியப்பன் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் 7 பேர் மருதநாடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி  கன்னியப்பன் வீட்டிற்கு நேரில் சென்று எவ்வாறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். தரையில் அமர்ந்து எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தது அக்கிராமத்தினரை நெகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது.
85 வயது முதியவர் உட்பட 7 பேர் முதன்முறையாக தேர்தலில் வாக்களிப்பதை அறிந்து மாவட்ட ஆட்சியரே நேரில் வீட்டிற்குச் சென்று விளக்கம் அளித்துள்ள சம்பவம் ஒவ்வொருவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.