மதுரை மத்திய சிறையில், கைதிகள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில், கைதிகளிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சிறைக்காவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கைதிகளுக்குள் மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
சிறை மதில் மீது ஏறிய 50-க்கும் மேற்பட்ட கைதிகள், அங்கிருந்த கற்களை எடுத்து, சாலையில் சென்ற வாகனங்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், சிறைக்கு செல்லும் சாலையின் இரு பக்கமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சிறை காவலர்கள் தங்களை மோசமாக நடத்துவதாகவும், தரமற்ற உணவுகளை வழங்குவதாகவும் கைதிகள் குற்றம்சாட்டினர்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்த கைதிகள், தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால், மதுரை சிறை வளாக பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், 150க்கும் மேற்பட்ட போலீசாரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
source ns7.tv