ns7.tv
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், ஐதராபாத்தைச் சேர்ந்த ஐடி கிரிட்ஸ் என்ற நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டது. அந்த நிறுவனம் அரசு நலத்திட்ட பயனாளர்களின் ஆதார் எண், உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சிக்காக வடிவமைக்கப்பட்ட ‘சேவா மித்ரா’ என்ற ஆப்ஸ் மூலம், ஆதார் தகவல் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இந்த ஆப்ஸ், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தெலங்கானா மக்களின் ஆதார் தகவல்களும் திருடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பான விசாரணையை எஸ்ஐடி போலீசாருக்கு மாற்றி, தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், இருமாநிலங்களிலும் பரபரப்பு நிலவுகிறது. எனினும், பாஜகவுடன் இணைந்து, ஆந்திர அரசுக்கு எதிராக, தெலங்கானா அரசு செயல்படுவதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.