திங்கள், 22 ஏப்ரல், 2019

குற்றச் செயல்கள் குறைய நீதிபதிகள் புதிய யோசனை! April 22, 2019

source ns7.tv
Image
அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்வது போன்ற பொதுமக்களையும், காவல்துறையினரையும் மிரட்டும் வகையிலான செயல்களுக்கு தடை விதித்தாலே 50% குற்றச் செயல்கள் குறைந்து விடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது உள்ளிட்ட செயல்களுக்கு மோட்டர் வாகன சட்டபடி அனுமதி உள்ளதா? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து உள்துறை செயலர், போக்குவரத்து துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "இந்தியா முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு நான்கு வழிச்சாலை, 6 வழிச்சாலை என விரிவாக்கம் செய்யபடுகின்றன.
 இதில் நெடுஞ்சாலைகளை அமைப்பது, பயன்பாட்டிற்கு கொணர்வது மட்டுமே அரசின் பணி.பின்பு இந்த சாலைகளை பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கபடுகிறது. அவர்கள் சுங்கச்சாவடிகளை அமைத்து சாலைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். முக்கியமாக சாலைகள் இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்த வேண்டும். சாலைகள் நடுவே அரளிச் செடிகள் நடப்பட வேண்டும். ஆனால் இந்த பணிகள் முறையாக நடை பெறுவதில்லை. இதனால் தற்போது சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்திருந்தார்.

மேலும், இருசக்கரம், மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் தடை செய்யப்பட்ட LED பல்புகளும், இரண்டு பல்புகளை விட அதிக பல்புகளை பொருத்தி வருகின்றனர். இதனாலும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்தும் ஏற்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விதிகளை மீறி பொருத்தபட்டுள்ள பல்புகளை அகற்ற வேண்டும்; ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 இது குறித்து சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில், கடந்த  2016ல் 1,50,785 பேரும் 2017-ல் 1,47,913 பேரும்  சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவ்வாறு நடந்த விபத்தில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, அரசின் விதிகளை மீறி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சீன தயாரிப்பு பல்புகள், LED பல்புகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பல்புகளை விட அதிக எண்ணிக்கையில் பல்புகள் பொருத்தவதற்கு போக்குவரத்து வாகன சட்டப் படி அனுமதி உள்ளதா? அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது தங்களின் தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்வது ஆகியவற்றிற்கு மோட்டர் வாகன சட்டபடி அனுமதி உள்ளதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், இது குறித்து உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

 தொடர்ந்து,  இது போன்ற செயல்கள் பொதுமக்களையும் காவல்துறையினரையும் மிரட்டும் வகையான செயலாக உள்ளது.  இது போன்ற செயல்களுக்கு ஏன் தடை விதிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது போன்ற செயல்பாடுகளுக்கு தடை விதித்தாலே 50% குற்ற செயல்கள் குறைந்து விடும் என கருத்து தெரிவித்து வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.