வியாழன், 11 ஏப்ரல், 2019

பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவு! April 11, 2019

source ns7.tv
Image
பசுமை பட்டாசு தயாரிப்பது தொடர்பான புதிய வழிமுறைகளை வகுத்து அதுகுறித்த அறிக்கையை அடுத்த மாதம் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பட்டாசு தயாரிக்க, விற்க, வெடிக்க தடைகோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, இந்திரா பானர்ஜி, சந்மானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், பட்டாசு தயாரிக்க பேரியம் எனும் வேதிப்பொருளை உபயோகிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் நிலை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாதிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், பேரியம் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது என குறிப்பிட்டார்.
மேலும், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், சுமார் 4 லட்சம் பேர் வேலையிழந்து உள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பான PESO தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாசு குறைந்த பட்டாசு தயாரிப்பதற்கான புதிய ஃபார்மூலா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதைக் கொண்டு பட்டாசு தயாரிக்கலாம் என்றும் தெரிவித்தார்.  இதையடுத்து, இது தொடர்பான அறிக்கையை PESO அமைப்பு ஏப்ரல் 30க்குள் மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு இதனை ஆராய்ந்து தனது அறிக்கையை மே 15ம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.