சனி, 20 ஏப்ரல், 2019

தமிழகத்தில் ஒன்றரை கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை : தலைமைத் தேர்தல் அதிகாரி April 20, 2019


தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் 71.90 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த இறுதிக்கட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னையில், 56.34 சதவீத வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். இடைத்தேர்தல் நடைபெற்ற 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 75.56 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக, சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். 
இதில், அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில், 82.26 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பெரம்பூர் தொகுதியில், 64.16 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக, சத்யப் பிரதா சாஹு கூறியுள்ளார். மேலும், சித்திரை திருவிழா நடைபெற்ற மதுரையில், 65.83 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அவர் தெரிவித்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்களில், ஒன்றரை கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.