வெள்ளி, 26 ஏப்ரல், 2019

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு! April 26, 2019

ns7.tv
Image
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பின்னர் புயலாக மாறி இலங்கை கடற்கரைக்கும் வட தமிழகத்திற்கும் இடையே நகரும் என வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு இடையே வரும் 30ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தயார் நிலையில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் 30 மற்றும் 1-ம் தேதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புகுழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்குமாறும் அவர் ஆணையிட்டுள்ளார். 
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். வழக்கத்தை விட கடல் சற்று சீற்றமாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 
இதேபோல் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். மீன்பிடி தடை காலம் என்பதால் விசை படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்த தூரம் சென்று மீன்பிடித்து வந்த பைபர் படகுகளும் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. 
 
ஃபனி புயல் அதி தீவிர புயலாக கரையை நெருங்கி வருவதால், நாகை, புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.