வெள்ளி, 26 ஏப்ரல், 2019

நெருங்கும் ஃபானி: புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! April 26, 2019

ns7.tv
Image
ஃபானி புயல் எதிரொலியாக புதுச்சேரியில் விடுப்பு எடுத்த அரசு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 
வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஃபானி புயலாக மாறி வரும் 30ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், புயலை எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புயலை எதிர்கொள்வதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புயல் தாக்குமானால், அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறினார்.
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து விடுப்பு எடுத்த அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளுடன், அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.