புதன், 24 ஏப்ரல், 2019

உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகும் 7 வயது மணிப்பூர் சிறுமி! April 24, 2019

source ns7.tv
Image
மணிப்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், உலக அளவில் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் உரையாற்றப்போவது இந்தியர்களுக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது.
பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டம், வருகிற மே 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், 140 நாடுகளை சேர்ந்த 3000 ஐநா பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதில், மணிப்பூரை சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியான லிஸிப்ரியா கஞ்சுஜம் (Licypriya Kangujam) பங்கெடுத்து உரையாற்ற உள்ளார். 
பேரிடர் மேலாண்மை குறித்த ஐநா பொதுக்கூட்டத்தில் பங்குபெறுபவர்களிலேயே மிகக்குறைந்த வயது பிரதிநிதி, லிஸிப்ரியா கஞ்சுஜம். இவர், இந்திய நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதியாக ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளப்போகிறார். ஏற்கனவே, கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை குறித்த ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் சம்பவங்களை பற்றி தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து பெரும் வேதனைப்படுவதாகவும், அவர்களுக்காக உலக மக்கள் ஒன்றுகூட வேண்டும் எனவும் லிஸிப்ரியா தெரிவித்தார். மிக இளம் வயதிலேயே உலக அரங்கில் உரையாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறார் என்பதற்காக சிறுமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.