வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், தமிழகத்தை தாக்கும் வாய்ப்புகள் குறைவு என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபானி புயல் தற்போது இலங்கையின் திருகோணமலையில் இருந்து 850 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தை புயல் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என்றும், வடதமிழகத்தில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகை மற்றும் காரைக்கால் துறைமுகத்திலும் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, கோடியக்கரை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பழையார் உள்ளிட்ட கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால், மீனவர்களின் படகுகள் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
source ns7.tv