புதன், 17 ஏப்ரல், 2019

பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் அமல்! April 17, 2019

source ns7.tv
Image
தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை அடுத்து, தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
அடுக்கடுக்கான வாக்குறுதிகள், ஆக்ரோஷ விமர்சனங்கள், வசை பாடல்கள்... இப்படி, தகிக்கும் வெயிலையையும் தாண்டி, ஒரு மாதத்திற்கும் மேலாக தெறித்த தேர்தல் பிரச்சாரக்களம்,  தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை மறுநாள் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் வேலூரை தவிர்த்து, 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சென்னையில் வாக்குப்பதிவு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ், தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். 
பிரச்சாரம் நிறைவடைந்ததை அடுத்து, பொதுக்கூட்டம், ஊர்வலம், பேரணி உள்ளிட்டவை நடத்த, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் சம்பந்தமாக அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பேசவும், தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதி சாராதவர்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள், தேர்தல் ஆய்வு முடிவுகளை மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்தவும் அனுமதியில்லை. தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.