Authors
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இறுதிகட்டதை நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம், கக்கன்ஜி நகர் மற்றும் காந்தி நகர் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாநிலம் முழுவதும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல முறை கோரிக்கை விடுத்தும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என குற்றம்சாட்டி கக்கன்ஜி நகர் மற்றும் காந்தி நகர் பகுதிவாசி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு பகுதியில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்க அனுமதித்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டதால் ஏராளமானவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் காலணியில் வசிக்கும் 800 க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து இளைஞர்கள், பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம், பாபநாசம் அருகே முறையான குடிநீர் வசதி இல்லாதை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவித்துள்ளனர். உத்தாணி ஆதிதிராவிடர் தெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே தரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், கழிவு நீர் வெளியேற வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத்தால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
source ns7.tv