ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கமல்ஹாசனுக்கு அனிதாவின் அண்ணன் பதில்! April 13, 2019

Image
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சார வீடியோவுக்கு, மாணவி அனிதாவின் குடும்பத்தினர் பதில் அளித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசிய கமல்ஹாசன், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள் யாருக்கு ஓட்டுப் போடக் கூடாது என்பது தெரியும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாணவி அனிதாவின் அண்ணன் கமல்ஹாசனின் பிரச்சார வீடியோவுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கமல்ஹாசன் சொல்வது போல் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தங்கள் குடும்பம் தெளிவாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளதாக தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தின் பாதுகாப்பை குறைந்தபட்சம் உறுதி செய்யும் கட்சி திமுக தான் எனவும் குறிப்பிட்டார். மேலும் திமுக கூட்டணி சார்பில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கே தங்கள் வாக்கு எனவும், அவரே தலைவர் என்ற பதத்திற்கு தகுதியுடையவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts: