சனி, 20 ஏப்ரல், 2019

என்னிடம் தவறாக நடக்க முயன்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா? : காங்கிரஸில் இருந்து விலகினார் பிரியங்கா சதுர்வேதி! April 19, 2019


Image
காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கட்சிப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் பிரியங்கா திரிவேதி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மதுராவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அங்கு குழுமியிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்காவிடம் தவறாக நடந்துகொண்டனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் அவர் முறையிட்டதை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டனர். உத்தரப்பிரதேச மேற்கு பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியா உத்தரவின் பேரிலேயே அவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோரிடம் பிரியங்கா சதுர்வேதி முறையிட்டும் எந்த பலனும் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
காங்கிரஸ் கட்சி குண்டர்களுக்கு குரல் கொடுக்கிறது… வியர்வையும் இரத்தத்தையும் சிந்துபவர்கள் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் கட்சியில் என்னை அச்சுறுத்தியவர்கள் மீது எந்த துரும்பு நடவடிக்கைகளும் இல்லை என இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை அவர் ராகுல்காந்திக்கு அனுப்பியுள்ளார்.
இதனிடையே மும்பையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேயை நேரில் சந்தித்து சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார் பிரியங்கா திரிவேதி. 
ரஃபேல் உட்பட பல்வேறு விவகாரங்களில் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்கள் குறித்து பேசிவந்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.