பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலின் செயல்பாடு குறித்த அதிர வைக்கும் தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளது.
டெல்லியின் அமான் விஹார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக மகளிர் நல ஆணையத்திற்கு 181 என்ற உதவி எண்ணில் புகார் வந்தது. இதனையடுத்து கடந்த வியாழன் அன்று மகளிர் ஆணைய குழு ஒன்று அதிகாலை அந்த வீடு இருக்கும் பகுதிக்கு சென்றது. பகுதிவாசிகளிடம் இது குறித்து விசாரித்த போது பகலிலேயே அந்த வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டது.
காலை 10.30 மணியளவில் அந்த வீட்டிற்குள் 4 பெண்கள் நுழைவதை மகளிர் ஆணைய அதிகாரிகள் பார்த்துள்ளனர். அடுத்த 15 நிமிடங்களிலேயே ஒரு பெண் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இருசக்கர வாகனங்களில் ஆண்கள் அங்கு வரத்தொடங்கியுள்ளனர். அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னதாக செல்போன்களில் பேசி அனுமதி பெற்று சென்றுள்ளனர். அடர்த்தியான மூங்கில் செடிகள் அந்த வீட்டை மறைத்து இருந்ததால் வீட்டினுள் நடப்பதை அதிகாரிகளால் பார்க்க இயலவில்லை. அதன் பின்னர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் உதவியுடன் மகளிர் ஆணைய அதிகாரிகள் நண்பகலில் அந்த வீட்டிற்குள் சென்றபோது 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அங்கு இருந்துள்ளனர். கையும் களவுமாக பிடிபடுவதை தடுக்க அந்த வீட்டின் உரிமையாளர் கவுதம் என்பவர் வீட்டின் பின்வாசல் வழியாக அவர்களில் 4 பேரை தப்பிக்க வைக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் சுற்றுப்புறவாசிகளின் தப்பியவர்களை பிடித்துவிட்டனர்.
அமான் விஹார் காவல்நிலையத்திற்கு பிடிபட்ட அனைவரும் அழைத்துச் செல்லபட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது தங்களது அனுமதியுடனே பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அந்த பெண்கள் காவல்துறையினரிடம் ஒப்புதல் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.250 என்ற வகையில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பகல்வேளையிலேயே 7 ஆண்களுடன் இருக்க வேண்டும் என்று அப்பெண்கள் கூறியது அதிரவைப்பதாக உள்ளது. அதில் ஒரு பெண் மாற்றுத்திறனாளி என்றும், மற்றொருவர் கணவர் போதையால் அடிமைப்பட்டுக்கிடப்பதால் குடும்ப பாரத்தை சுமக்க இத்தொழிலில் ஈடுபட்டதாகவும் மற்றொருவர் அசாமைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.