தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு மணலை வாங்கியதற்கான தொகையை ஒரு வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் மணலை இறக்குமதி செய்துள்ளது. இந்த மணல் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மணலை வெளியே எடுத்து செல்ல தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மலேசிய மணலை டன்னுக்கு ஒன்றுக்கு 2050 ரூபாய் வீதம் தனியார் நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி மதன் லோக்கூர் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தபோது, முழு தொகையையும் வாஙகியதற்கான முழு தொகையை இன்னும் ஒரு வார காலத்தில் உச்சநீதிமன்றத்தில் செலுத்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, வெளிநாட்டிலிருந்து மணல் வாங்க தாங்களே பணம் கொடுத்ததால், தமிழக அரசு வழங்கும் பணத்தை மரியா இன்டர்நேஷனல் நிறுவனம் என்ற பெயரில் காசோலையாக வழங்க கோரி அந்நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமையா எண்டர்பிரைசஸ்ஸிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.