திங்கள், 1 அக்டோபர், 2018

வேலைவாய்ப்பு முகாம் மூலம் 155 முன்னாள் சிறைக் கைதிகளுக்கு பணி! October 1, 2018

Image

முன்னாள் சிறைக்கைதிகளுக்காக நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம் மூலம் 155 பேருக்கு பணி வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2014ல் தெலங்கானா மாநிலம் புதிதாக பிரிக்கப்பட்ட பின்னர் மாநில சிறைத்துறை, குற்றவாளிகளின் மறுவாழ்விற்காக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலை பெற்று சென்றவர்கள் மீண்டும் குற்ற நிகழ்வுகளில் ஈடுபடாத வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் நோக்கத்தில், அவர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள State Institue of Correctional Adminstration மையத்தில் 'Job Mela-2018' என்ற பெயரில் முன்னாள் சிறை கைதிகளுக்கான பிரத்யேக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 31 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகளாக இருந்து சிறைகளில் இருந்து விடுதலையான 230 பேர் கலந்துகொண்டனர். 

HDFC, Flipkart, Swiggy உள்ளிட்ட 12 நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்துகொண்டன. எலக்ட்ரீஷியன், ஓட்டுநர், டெக்னீஷியன்கள், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், உதவியாளர்கள் போன்ற பணியிடங்களுக்காக இந்த நிறுவனங்கள் 155 பேரை தேர்ந்தெடுத்து அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கின.

சிறைக்கைதிகளாக இருந்து வெளிவருவோருக்கு பணி வழங்க பெரும்பாலானோர் தயக்கம் காட்டுவதாலேயே அவர்கள் சிறைகளில் இருந்து வெளியே வந்தாலும் திருந்தி வேறு பணிகளில் ஈடுபடாமல் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கருதப்படும் நிலையில், முன்னாள் சிறைக்கைதிகளின் நலனில் அக்கறை கொண்டு தெலங்கானா சிறைத்துறை மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை இதர மாநிலங்களுக்கு ஒரு பாடமாக அமையலாம்.