உத்தரபிரதேசத்தில் 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஆறு வயது சிறுமியை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.
கமல்ஹஞ்ச் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ரஷிபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமி சீமா, புதிதாக அமைக்கப்பட்ட 60 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தகலவறிந்த தீயணைப்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழுவினர் ஒன்றிணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க குழாய் வழியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.
25 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியுள்ள நிலையில், ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டப்பட்டது. மீட்புப் பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். எனினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தந்தை அண்மையில் உயிரிழந்த நிலையில், தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால், சிறுமி சீமா மாமா வீட்டில் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
source ns7.tv