source ns7.tv
திராவிட கட்சிகள் காலம் காலமாக வைத்த கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இணைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த அறிக்கைக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு என்ன?
காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேசிய அளவில் விவாத பொருளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாநில சுயாட்சியை முன்னிறுத்தி வெளிவந்துள்ள இந்த அறிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் கடந்த காலங்களில் மாநில உரிமைகளை அதிகம் பறித்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இவ்வாறு வெளியாகியிருப்பது இந்திய கூட்டாட்சிக்கு சில சமிஞ்ஞைகளைத் தந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் 2014ல் அக்கட்சி அடைந்த தோல்வி என்றே கருதப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வியில் மத்திய அரசின் அதிகாரங்கள் குறைக்கப்படும் என்றார். பள்ளிக்கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறியிருக்கிறது. நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு என்ற வாக்குறுதியும் முக்கியமானது.
இந்த வாக்குறுதியின் அடிப்படை தமிழகத்தில் இருந்து கிளம்பியது என்பதுதான் நிதர்சனம். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், அதன் காரணமாக அனிதா என்ற மாணவி உயிரிழந்த போதும் அதற்கு எதிராக கொதித்தெழுந்தது தமிழகம். குறிப்பாக மற்ற மாநிலங்களில் மயான அமைதி நிலவி கொண்டிருக்க, மாநில சுயாட்சியில் தலையிடாதீர்கள் என்ற குரல் தமிழகத்தில் இருந்தே ஒலித்தது. அந்த குரலின் வீரியம் தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்துள்ளது.
1960களில் இந்தியாவில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி இந்தியா இந்தி தேசமாகாமல் தடுத்து, மாநிலங்களின் தனித்தன்மையை காத்தது தமிழகம். தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து தடுத்த போது, மெரினா புரட்சி நடத்தி, அடையாளத்தை மீட்டெடுத்தவர்கள் தமிழர்கள். இந்த வரிசையில் தான் காங்கிரஸ் கட்சியின் இந்த மாற்றத்தையும் கருதுகின்றனர் அரசியல் ஆர்வலர்கள். ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சி அமைந்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுமானால், இந்தி பேசாத, மாநில சுயாட்சியை விரும்பும் மாநிலங்களுக்கு தமிழகம் உரிமை பெற்று தந்தது என்பதே நிதர்சனமாக இருக்க முடியும்.
மாநிலங்கள் குறித்த தேசியக் கட்சிகளின் பார்வை மாற வேண்டியதன் அவசியத்தை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாக்கி இருக்கிறது. காங்கிரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதைத் தாண்டி, ஒரு வேளை வரும் தேர்தலில் காங்கிரஸ் வென்றால், அடுத்த தேர்தலில் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல் அறிக்கையை பாஜகவும் தயாரிக்கும் சூழல் ஏற்படும்.
மாநிலங்களை முன்வைத்து செய்யப்படும் அரசியல் தான் பலனளிக்கும் என்ற நிலைக்கு தேசியக் கட்சிகள் வந்து சேர்ந்திருக்கின்றன. பிராந்திய நலன்களை முன்னிறுத்தி செயல்பட்ட மாநிலக் கட்சிகளின் வெற்றி இது என்பதே நிதர்சனம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தொடக்க வரிகளான India shall be a Union of states அந்த நிலையை நோக்கி இந்திய ஒன்றியம் நகரும் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கிறது