தமிழக தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 20 ஆம் தேதியிலிருந்து திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை மற்றும் அரசு இயந்திரங்களை கொண்டு சோதனை நடத்துவது, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
தமிழக காவல்துறை தலைவர், டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. சத்திய மூர்த்தி வழிகாட்டுதலின் படி, போலீஸ் வாகனங்களில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். எனவே, உயர்பதவியில் இருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் ஜனநாயகம் தோல்வி அடையும் என ஆர்.எஸ்.பாரதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
source ns7.tv