சனி, 4 மே, 2019

ஒடிசாவில் மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல்...! May 03, 2019

ns7.tv
Image
தமிழகத்தை அச்சுறுத்திய ஃபானி புயல் ஒடிசாவில் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவிட்டு மேற்கு வங்கத்தை நோக்கி முன்னேறியுள்ளது. மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்துடன் வீசிய அதிவேக புயல் கரையை கடந்ததால் ஒடிசாவில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 
தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக தனது தோற்றத்தை வெளிக்காட்டிய ஃபானி புயல் முதலில் கடந்த 30ந்தேதி வட தமிழகத்தின் வடகடலோர பகுதிக்கும் தெற்கு ஆந்திரா பகுதிக்கும் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், தமது திசையை மாற்றிய ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி முன்னேறியது. மிக அதி தீவிர புயலாக மாறிய ஃபானி,  வானிலை ஆய்வு மையங்கள் ஏற்கனவே கூறியபடி ஒடிசாவின் பூரி பகுதியில்  இன்று கரையைக் கடந்தது. காலை 8 மணி முதல் சுமார் 4 மணி நேரத்திற்கு கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி  முழுவதும் கரையைக் கடந்தது. 

ஃபானி புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக 205 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் ஒடிசா தலைநகர் புவனேஷ்வர், பூரி, கட்டாக் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. சாலைகளில் அவை குவிந்து கிடந்ததால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் நகரங்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளும் இருளில் மூழ்கின. கட்டிடங்களின் மேலிருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் தூக்கி வீசப்படும் அளவிற்கு ஃபானி தனது கோரதாண்டவமாடியது.
ஃபானி புயல் தாக்கம் எதிரொலியாக ஒடிசாவில் 25லிருந்து 30 சென்டி மீட்டர் வரை கனமழை கொட்டியது. ஃபுயல், மழையால் அம்மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன.சுமார் 12 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
இதற்கிடையே ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் ஃபானி புயல் கரையை கடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரயில்வே பெண் ஊழியர் ஒருவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஃபானி புயல் ஒடிசாவில் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலியாக அந்த குழந்தைக்கு ஃபானி என பெற்றோர் பெயர் வைத்தனர். 
ஃபானி புயல் ஏற்படுத்திய பாதிப்பால் ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட மாவட்டங்கள் ஆந்திராவில் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. ஒடிசாவிலும், ஆந்திராவிலும் கோரத்தாண்டவமாடிய பின்னர் சற்று வலுவிழந்துள்ள ஃபானி புயல் தற்போது மேற்கு வங்க மாநிலத்தை நோக்கி முன்னேறி வருகிறது. 
அங்கு இன்று நள்ளிரவோ அல்லது நாளை அதிகாலையோ ஃபானி புயல் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை மேற்கொள்ளவிருந்த தமது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

source ns7.tv