source ns7.tv, http://www.ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/4/5/2019/apologised-supreme-court-not-bjp-or
ரஃபேல் விவகாரம் குறித்த எனது பேச்சுக்கு பாஜகவிடமோ, பிரதமர் மோடியிடமோ மன்னிப்பு கேட்கவில்லை உச்சநீதிமன்றத்தில் தான் மன்னிப்பு கேட்டேன் என ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் பத்திரிக்கையில் வெளியான ஆதாரங்கள் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்ற தீர்ப்பை கடந்த மாதம் 10ம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றமே காவலனை திருடன் என ஒப்புக்கொண்டது (Chowkidar Chor Hai)” என்றார்.
உச்சநீதிமன்றம் அப்படி ஒரு கருத்தை தெரிவிக்காத நிலையில் ராகுல்காந்தி உச்சநீதிமன்றம் தெரிவித்ததாக கருத்தை திரித்து வெளியிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு எனக் கோரி ராகுல் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் பாஜக பெண் எம்.பியான மீனாட்சி லேகி. இதனை விசாரித்த உச்சநீதிமன்றமும் கடந்த 15ம் தேதி தாங்கள் அப்படி ஒரு கருத்தை தெரிவிக்கவில்லை என தன்னிலை விளக்கம் அளித்தனர். இந்த வழக்கு தொடர்பாக வருத்தம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். இருப்பினும் வருத்தம் என்பது மன்னிப்பு சமமான வார்த்தையா என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணையை மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராகுல், வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றம் கூறாத கருத்தை கூறியதால் நான் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளேன், பாஜகவிடமோ, மோடியிடமோ நான் மன்னிப்பு கோரவில்லை. இருப்பினும் காவலனே திருடன் என்ற எங்களது கோஷம் தொடரும் என்றார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சியின் போது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல்களை வீடியோ கேமுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியுள்ளதன் மூலம் அவர் காங்கிரஸை அவமதிக்கவில்லை இந்திய ராணுவத்தினை அவமதிக்கிறார்.