சென்னையில் இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக அறிவித்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன், நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில், இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா நகைக்கடன் சேவை வழங்கப்பட்டு வந்தது. இதனை நம்பிய ஏராளமான இஸ்லாமியர்கள், தங்கள் நகைகளை அடகு வைத்து கடன்தொகையை பெற்றுள்ளனர். இவ்வாறு நகைகளை பெற்ற வாடிக்கையாளர்கள் முறையாக பணத்தை செலுத்திய பின்னரும் நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் கடையின் உரிமையாளர் சையது இப்ராகிம் தலைமறைவாகிவிட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கடையை முற்றுகையிட்டனர். தங்கள் நகைகளை மீட்டு தரக்கோரி 30க்கும் மேற்பட்டோர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கூட்டாக சேர்ந்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
source ns7.tv