வெள்ளி, 3 மே, 2019

ஒடிசாவின் பூரி அருகே கரையைக் கடந்து வருகிறது ஃபானி புயல்.. May 03, 2019

source ns7.tv
Image
கடந்த சில நாட்களாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஃபானி புயல் தற்போது ஒடிசாவில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு பலத்த காற்று வீசி வருவதோடு, கன மழையும் பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபானி புயல், மிக அதி தீவிர புயலாக வலுப்பெற்று இன்று கரையை கடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு, காலை 11 மணி வரை நீடிக்கும் என புபனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குநர் HR Biswas தெரிவித்துள்ளார். 
இந்த புயல் காரணமாக, ஒடிசாவில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒடிசாவின் பூரி, ஜகத்சிங்பூர், கோர்தா, கேந்தரபரா, பட்ராக், பலேஸ்வர், கஞ்சம் உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள், 50க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு சுமார் 900 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு சமைப்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கூடங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. 
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவின் கடற்கரையோர மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதுவரை 147 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தலைநகர் புபனேஸ்வரில் உள்ள விமான நிலையம் நேற்று இரவு முதலே மூடப்பட்டுவிட்டதால், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. 
மாநில நிர்வாகத்துடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கவும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்கவும் தேவையான குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் பாதித்த பகுதிகளில் இலவச SMS சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதேபோல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வானில் இருந்து குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்களை அளிப்பதற்கான பணியில் கடற்படையின் கப்பல் ஒன்று ஹெலிகாப்டர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 
ஒடிசா மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் ஃபானி புயல் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டிணம், களிங்கப்பட்டிணம், பீமுனிபட்டிணம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் 10ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
மேற்கு வங்கத்தின் கடலோர நகரங்களான டிக்கா, மந்தர்மணி, தேஜ்பூர், ஷங்கர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் காற்றோடு கன மழையும் பெய்து வருவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. கடற்கரையோர ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளதால், 600 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஃபானி பயல் கரையைக் கடந்து வருவதால், அதன் தாக்கம் குறைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source ns7.tv