வியாழன், 8 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்...! August 08, 2019

credit ns7.tv
Image
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில், நேற்று இரண்டாவது நாளாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப், காஷ்மீர் விவகாரத்தில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என கூறினார். பல ஆண்டுகளாக இப்பிரச்சனை நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். 
தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது, காஷ்மீர் மக்கள் அம்மாநிலம் பிரிக்கப்பட்டதை உண்மையிலேயே ஏற்றுக் கொண்டார்களா என்றும், அப்பகுதி மக்கள் அதுபற்றி தங்களிடம் தெரிவிக்க, மோடியால் அனுமதிக்க முடியுமா எனவும் சவால் விடுத்தார். இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒருதலைபட்ச நடவடிக்கை எடுத்ததாக கூறி, கண்டன தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது தொடர்பாக, இந்தியா தங்களிடம் ஆலோசிக்கவில்லை என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்காவிடம் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியா தங்களிடம் பேசவோ, தகவல் தெரிவிக்கவோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.