credit ns7
குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றி வந்த உதவி காவல் ஆணையர் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து 4வது கட்டமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மாநில, மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடிருந்த உதவி காவல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மேலும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய பல அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதிகாரியின் அலுவலகம் முகப்பு கட்டடித்தில் உள்ளதாகவும், அது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகத்திற்கு சற்று தூரமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் உறவினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அருகே உள்ள ‘பிரசிடென்ட் எஸ்டேட்’ பகுதியில் வசித்து வரும் 125 குடும்பங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.