திங்கள், 18 மே, 2020

ஆம்பன் புயல் எதிரொலி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால், மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆம்பன் புயலானது தெற்கு வங்க கடல் பகுதியில்  சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 620 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுவைக்கு கிழக்கே 680 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலானது ஒடிசா கடற்கரையை நோக்கி வட மேற்கில் நகர்ந்து பின்னர் அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் அதன்பின்னர், 20ம் தேதி மாலை மேற்கு வங்க திகா கடற்கரை மற்றும் வங்கதேசத்தின் ஹட்டியா (Hattiya)தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.  ஆம்பன் புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றன. 
ஆம்பன் புயல் நாளை மறுநாள் மேற்கு வங்க பகுதியில் கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆம்பன் புயல் வடமேற்கு நோக்கி 2 முதல் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை பட்டினம்பாக்கம், மெரினா, எலியட்ஸ் பகுதிகளில் கடலலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.
credit ns7.