தமிழகத்தில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்தன.
சுங்க கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை-பாடாலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை-தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னமராவதி, தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கார், ஜீப் போன்றவற்றுக்கு 80 ரூபாயும், மினி பேருந்து உட்பட இலகுரக வாகனங்களுக்கு 140 ரூபாயும், ஆம்னி பேருந்துகளுக்கு 280 ரூபாயும், கண்டெய்னர் உட்பட கனரக வாகனங்களுக்கு 445 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.