ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஏர்பேடு வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீஸார், வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, கடத்தல்காரர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக் கூறப்படுகிறது.
அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் கொல்லப்பட்டார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரத்தில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 22 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவுக்கு செம்மரம் கடத்துவதற்கு தமிழர்கள் செல்லும் நிலை ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.