சனி, 1 செப்டம்பர், 2018

காஷ்மீர்: 24 மணிநேரத்தில் காவல்துறையினரின் உறவினர்கள் 10 பேரை கடத்திய தீவிரவாதிகள்! August 31, 2018

Image

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தலைவரின் மகனை காவல்துறையினர் கைது செய்ததற்கு பழிக்குப்பழியாக 5 காவல்துறை அதிகாரிகளின் உறவினர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான சையது சலாஹுதீனின் மகன் ஷகீல் அகமது பயங்கரவாத செயல்களுக்கு பண உதவி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அதே போன்று தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும்,  சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த கைது சம்பவத்திற்கு பின்னர் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவல்துறையில் பணியாற்றிவருபவர்களின் உறவினர்களை ஒருவர் பின் ஒருவராக தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 10 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் ஷோபியன், குல்காம், அனந்த்நாக் மற்றும் அவந்திபோரா மாவட்டங்களில் இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. கடத்தப்பட்டவர்களில் 9 பேர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; சுபைர் அகமது பாத், ஆரிஃப் அகமது சங்கர், ஃபைசான் அகமது மக்ரோ, சுமர் அகமது ராதர், கொளர் அகமது மாலிக், சாகூர் அகமது சர்கர், முகமது ஷஃபி, நசீர் அகமது மிர் மிதூரா மற்றும் அத்னன் அஷ்ரஃப் ஷா 

காஷ்மீர் காவல்துறையில் பணியாற்றும் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள ஒருவரின் உறவினர் கடத்தப்பட்டவர்களில் ஒருவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தீவிரவாதிகளால் காவல்துறையினரின் உறவினர்கள் கடத்தப்படுவது இது முதல் முறை அல்ல கடந்த ஓராண்டில் பல முறை இது போன்ற கடத்தல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.