
கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களில் அதிக அளவு பாதசாரிகள் உயிரிழப்பு பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துக்கள் குறித்து மத்திய அரசிடம் உள்ள புள்ளி விபரங்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரியாக ஒரு நாளைக்கு 56பேர் என்கிற அடிப்படையில் சாலை விபத்துக்களில் பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது
இந்த பட்டியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2017ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்த பாதசாரிகளின் எண்ணிக்கை 3ஆயிரத்து 507 ஆகும்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 1831 பேரும் மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் 1379 பேரும் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்று சாலை விபத்துக்களில் பலியானவர்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்திலுள்ளது. அந்த வகையில் 2017ம் ஆண்டு 6 ஆயிரத்து 329 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 5 ஆயிரத்து 699 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 659 பேரும் பலியாகியுள்ளனர்.