திங்கள், 8 அக்டோபர், 2018

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் October 7, 2018

Image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா நோக்கி செல்வதாக கூறினார். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக கூறிய பாலசந்திரன், மினிக்காய் தீவில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளதால் அரபிக்கடல் பகுதிக்கு இன்று முதல் 12-ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.