ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் மொத்தம் 4 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. 12 மாவட்டங்களில் உள்ள 422 வார்டுகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜம்மு, லடாக், ரஜோரி ஆகிய பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மொத்தமுள்ள 1145 வார்டுகளில், 2990 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவையொட்டி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக தெற்கு காஷ்மீர் பகுதியில் இணையசேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இணைய சேவையின் வேகம் 2-ஜியாக குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 10ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 13ம் தேதியும், 4ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 16ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 20ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை இத்தேர்தலை புறக்கணித்துள்ளன.