வியாழன், 4 ஏப்ரல், 2019

தேர்தல் ஆணையத்தின் கவனகுறைவை வெளிச்சம் போட்டு காட்டிய சுயேட்சை வேட்பாளர்! April 03, 2019

Image
பெரம்பூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தமக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும்,  ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில்,  சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. 
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில்  சென்னை பெரம்பூர் தொகுதியில் ஜே. மோகன் ராஜ் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
வேட்பாளர்கள் வேட்புமனுவுடன் இணைத்து படிவம் 26-ல் தங்களது சொத்து விவரங்களையும் சேர்த்து குறிப்பிட வேண்டும். அந்த சொத்து மதி்ப்பு படிவத்தில் சுயேட்சை வேட்பாளர் மோகன் ராஜ், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் உலக வங்கியில் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
perambur01


தற்போது வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜின் வேட்புமனு ஏற்கபடுமா என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். அதே போல், தேர்தல் ஆணையம் சரியான முறையில் கவனிக்காமல், அவரது இந்த வேட்புமனுவையும் ஏற்று, அவருக்கு பச்சை மிளகாய் சின்னமும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், மோகன்ராஜ் தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவை வெளியில் கொண்டு வருவதற்காக இந்த தகவலை சமூக வலைதளங்கள் வாரியாகவும் பத்திரிக்கை வாயிலாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து நமது நியூஸ்7 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ”தேர்தல் ஆணையம் எவ்வளவு கவனக்குறைவாக செயல்படுகிறது என்பதனை மக்களுக்கு உணர்த்தவே. பொய்யான தகவல்களுடன் கூடிய வேட்புமனுவை தாக்கல் செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். வேட்பாளர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிப்பதில் மட்டுமே தேர்தல் அதிகாரிகள் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்”. 
perambur02

மேலும், 2 ஜி அலைக்கற்றை வழக்கு, முறையாக விசாரிக்கப்படவில்லை என்பதை குறிக்கும் வகையில், இந்த தொகையை குறிப்பிட்டதாக மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.  அதேபோன்று,  உலக வங்கிகளில் இந்தியா  வாங்கியுள்ள கடன் தொகையை நினைவூட்டும் வகையில், 4 லட்சம் கோடி ரூபாய் என மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 
அதேநேரம், ஆளுங்கட்சிக்கு வேண்டாத ஒரு நபரின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்வதென்றால் அது உடனடியாக நடக்கிறது. அப்போது வேட்புமனுவில் உள்ள அம்சங்களைச் சரிபார்த்து குறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். மற்ற தருணங்களில் ஏன் அப்படிச் செய்வதில்லை  என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பெரம்பூரில் நடைபெற்ற இந்த சம்பவம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை  கேள்விக்குறியாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

source ns7.tv