வியாழன், 4 ஏப்ரல், 2019

சவூதிஅரேபியாவில் மிக வேகமாக வறண்டு வரும் மிகப்பெரிய எண்ணெய் வயல்! April 04, 2019

Authors
Image
உலகில் எரிபொருளை சார்ந்து, பல நூறு கோடி வாகனங்கள் இயங்கி வரும் நிலையில், சவூதியில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வயலில் உற்பத்தி குறைந்திருக்கிறது. 
சவூதி அராம்கோ என்பது சவூதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமாகும். இதன் கட்டுப்பாட்டில், தான் அந்நாட்டின் பெரும்பாலான எண்ணெய் வயல்கள் உள்ளன. இந்நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல், மிக வேகமாக வறண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
சவூதி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 174 மைல் நீளமுள்ள கவார் எண்ணெய் வயலில் மட்டும், நாள்தோறும் 50 லட்சம் பேரல் பெட்ரோலிய எரிபொருள் எடுக்கப்பட்டு வந்தது. எனினும், ஒரு கோடியே 20 லட்சம் பேரல்கள் வரை, இந்த வயலில் எரிபொருள் எடுக்க இயலும், என சவூதி அரசு பல ஆண்டுகளாக கூறி வந்தது. இந்நிலையில், அதன் உற்பத்தி திறன் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அளவை விட, கால் பங்கு அளவுக்கு, தற்போது அதன் உற்பத்தி குறைந்திருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
கவார் எண்ணெய் வயலின் உற்பத்தி திறன், வெகுவாக குறைந்திருப்பதன் காரணம் குறித்து, தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும், கவார் எண்ணெய் வயலில் இருந்து, அடுத்த 34 ஆண்டுகளுக்கு, நாள்தோறும் ஒரு கோடியே 20 லட்சம் பேரல் எண்ணெய் எடுக்கலாம் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதன் உற்பத்தி குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அத்தனை ஆண்டுகளுக்கு இங்கு எண்ணெய் வளம் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சவூதி அரசின் செல்வச் செழிப்புக்கு, மிக முக்கிய காரணமாக விளங்கும் இந்த வயலை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர, அமெரிக்கா, ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயன்றன. அமெரிக்க ராணுவம், தனது படைகள் மூலம், உலகின் மிகப்பெரிய இந்த எண்ணெய் வயலை கைப்பற்றுவது குறித்து, ஒருகாலத்தில் ரகசிய திட்டம் வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

source ns7.tv