பொள்ளாச்சியில் இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே மற்றுமொரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
கோவையில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியில் மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட மாணவியின் செல்போன் சிக்னலை பயன்படுத்தி, ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் பகுதியில் சதீஷ் என்ற அப்பெண்ணின் உறவினரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதான நபரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இறந்த மாணவியும், சதீசும் சிறு வயதில் இருந்தே காதலித்து வந்ததாகவும், ஆனால் மாணவியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால், சதீஷ் வேறு திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சதீஷ் வட்டித்தொழில் செய்து வந்ததும், காதலித்த காலத்தில் மாணவிக்கு நகைகள் வாங்கி கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் தனது நகைகளை தரும்படி மாணவியிடம் கேட்டுள்ளார் சதீஷ். அதனால், இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவிக்கு போன் செய்த சதீஷ்குமார் கல்லூரிக்குச் சென்று தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
பூசாரிபட்டி அருகே சென்ற போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொலை செய்யும் நோக்கில் சென்ற சதீஷ்குமார், பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தி உள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்ததால் உடலை புதருக்குள் தள்ளி விட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே உயிரிழந்த கல்லூரி மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட மாணவியின் கழுத்து, மார்பு என மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை நிறைவுற்றதையடுத்து கல்லூரி மாணவியின் உடலை, அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வருத்தத்தை விட கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
source ns7.tv