திங்கள், 1 அக்டோபர், 2018

5 நாடுகளில் உள்ள நீரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி! October 1, 2018

Image


வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு சொந்தமான வெளிநாடுகளில் உள்ள 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதன் விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் 14,356 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் குடும்பத்தினருடன் பதுங்கியிருக்கும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, Interpol எனப்படும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

பணமோசடி சட்டம் தடுப்பு பிரிவு 5ன் படி வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 278 கோடி ரூபாய் பணம் இருப்பு உள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் செண்ட்ரல் பார்க் பகுதியில் நீரவ் மோடியின் மனைவி ஏமி மோடி மற்றும் குழந்தைகள் பேரில் உள்ள இரண்டு சொகுசு பங்களாக்களுக்கு சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 216 கோடி ரூபாய் ஆகும்.

நீரவ் மோடியின் சகோதரியான பூர்வி மோடிக்கு சொந்தமாக பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ள முதலீட்டு நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதில் 44 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.

பூர்வி மோடிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 19.5 கோடி ரூபாயாகும்.

மேலும் பூர்வி மோடியின் பெயரில் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதன் மதிப்பு 57 கோடி ரூபாயாகும். 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகார் பதிவு செய்யப்பட்ட பின்னரே இந்த வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல ஹாங்காங்கில் அவருக்கு சொந்தமான 22.70 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் தற்போது இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நீரவ் மோடியின் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகளை அமலாக்கத்துறையினர் கண்டறிந்த நிலையில் தற்போது அவற்றில் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நீரவ் மோடியின் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் பிடி நாளுக்கு நாள் இறுகி வரும் நிலையில் விரைவில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிமினல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை ஒருசில வழக்குகளில் மட்டுமே வெளிநாட்டு சொத்துக்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.